மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் தின நிகழ்வில் நேற்று கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
மேலும், மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் அரச திணைக்களங்கள் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும்.
“மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும். அதன் ஊடாகத்தான் அதனை நிலைநாட்ட முடியும். பொலிஸார் சில இடங்களில் முறைப்பாடுகளை செய்யச் செல்லும் பொதுமக்களின் முறைப்பாடுகளை ஏற்பதில்லை என எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.
இத்தகைய பாரபட்சங்கள் இல்லாதொழிக்கப்படுவது மனித உரிமைகளை நிலைநாட்ட உதவும். எமது சமூகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்.
எமது அரச அலுவலகங்களை அவர்கள் இலகுவாக அணுகுவதற்கான வழிகள் ஏற்படுத்தப்படவேண்டும். யாழ். மாவட்டச் செயலராக இருந்தபோது மாற்றுத் திறனாளிகள் அணுகுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்திருந்தேன்.
இந்த நிகழ்வில், மாற்றுத்திறனாளிகள் ஆட்சேர்ப்புக்கான வழிகாட்டுதல் பரிந்துரைகள் அடங்கிய ஆவணம், ஆளுநரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளரால் கையளிக்கப்பட்டது.
இங்கு தலைமையுரையாற்றிய பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ், கைதுகளின் போதான சித்திரவதை தொடர்பிலும், அரச நிறுவனங்களில் இடம்பெறும் பாரபட்சம் தொடர்பிலுமே அதிகளவான முறைப்பாடுகள் தமக்குக் கிடைக்கப்பெறுவதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன் அரச நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகுதலுக்குரிய வசதிகள் போதுமானளவில் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வடக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கின் 4 மாவட்டங்களில் மாவட்டச் செயலராக இருந்தவர். அவருக்கு இந்த மாகாணத்தின் உட்கட்டமைப்பு பிரச்சினைகள் நன்கு தெரியும். நிர்வாகத் தொய்வும் தெரியும். அப்படியான ஒருவரிடம் எமது கோரிக்கைகளை முன்வைப்பது தீர்ப்பதற்கு இலகுவானதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.